மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுர ஆதீன மடம் உள்ளது. மடத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஞானாம்பிகை உடனுறை ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் 11 நாட்கள் வைகாசி பெருவிழா நடைபெறும். இந்த மடத்தை தோற்றுவித்த குருமுதல்வர் ஸ்ரீ குருஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் குருபூஜை பெருவிழா நடைபெறும்.
விழாவின் கடைசி நாளான்று தருமபுர ஆதீனம் சன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து ஆதினத்தை சுற்றி நான்கு வீதிகளிலும் சுற்றி வருவது பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மனிதனை மனிதன் தூக்குவதற்கு திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், முதல்வரை சந்தித்து பல்வேறு ஆதீனகர்த்தர்கள் பட்டிணபிரவேசம் நடைபெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது.
பட்டினப்பிரவேசம் பெருவிழா தருமபுர ஆதீனம் 27 வந்து குருமகா சன்னிதானம் முன்னிலையில் கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளின் ஒன்றான திருத்தேரோட்டம் இன்று(மே 20) நடைபெற்றது. ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் மற்றும் பஞ்ச மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் இரண்டு திருத்தேர்களில் எழுந்தருளினார்.
தேரினை தருமபுர ஆதீனம் தம்பிரான் சுவாமிகள் தேரினை வடம்பிடித்து தொடங்கிவைத்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது தருமபுரம் ஆதின மடத்தை சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும், விழா நிறைவாக 11ம் நாளாக 22 ஆம் தேதி ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சிவிகை பல்லக்கில் வீதி உலா வரும் பட்டினப்பிரவேசம் காட்சியும் நடைபெற உள்ளது. இந்த பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பல்வேறு ஆதினங்களைச் சேர்ந்த ஆதீனகர்த்தர்கள் மற்றும் வெளிமாநில வெளிமாவட்ட பக்தர்கள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தருமபுரம் ஆதீனம் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனுமதி?