உலகப்புகழ்பெற்ற இஸ்லாமியர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமான நாகூர் தர்காவின் கந்தூரி விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, 14 நாட்கள் நடைபெறும் நாகூர் தர்காவின் 464ஆவது கந்தூரி விழா நேற்று (ஜனவரி 14) கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. கரோனா பரவல் காரணமாக, நாகை மீரா பள்ளியிலிருந்து வழக்கமாக 50க்கும் மேற்பட்ட கப்பல் ஊர்வலமாக வரும் நிலையில், இந்தாண்டு மந்திரிக் கப்பல், செட்டி பல்லக்கு, சின்ன ரதம் உள்ளிட்ட 8 மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட கப்பல்களில் மட்டுமே கொடி ஊர்வலம் நடைபெற்றது.
நாகை நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்த கொடி ஊர்வலம், இரவு அலங்கார வாசல் வந்தடைந்தது. பின்னர், புனித கொடிகள், பாத்திஹா ஓதப்பட்டு தர்காவின் 5 மினராக்களிலும் ஏற்றப்பட்டு கந்தூரி விழா தொடங்கியது.
அப்போது, வண்ண விளக்குகளால் மினாராக்கள் ஜொலிக்க விண்ணதிர வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கந்தூரி விழாவில் பங்கேற்க தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.
கந்தூரி விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராமன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் 23ஆம் தேதியும், பெரிய ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி 24ஆம் தேதி அதிகாலையும் நடைபெற உள்ளது.