மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் உரிமைக் குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநிலப் பொதுச் செயலாளர் ஜாஹிர் ஹுசைன் பங்கேற்றார்.
கூட்டத்துக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்நாட்டில் சொந்தப் பயன்பாட்டு வாகனங்கள் வாடகைக்கு இயக்கப்படுவது குறித்து, போக்குவரத்துத் துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
மிரட்டிப் பணம் பறிக்கு காவல் துறை
இதன்பேரில் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் பெயரளவிற்கு மட்டுமே நடவடிக்கை எடுப்பது கண்டனத்துக்குரியது. தமிழ்நாடு முழுவதும் சட்டத்திற்குப் புறம்பாக ஒன்வே ட்ராப் டாக்ஸி நடத்துவதால், வாடகைக் கார், மேக்சி கேப் ஒட்டுநர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
மயிலாடுதுறை மாவட்ட எல்லையான கொள்ளிடம் சோதனைச்சாவடி எல்லையைக் கடந்து செல்லும் சுற்றுலா வாகனங்களை நிறுத்தி, காவல் துறையினர் மிரட்டி பணம் பறிப்பது வாடிக்கையாக உள்ளது. பணம் தராதவர்கள் மீது வாகன எண்ணைக் கொண்டு ஆன்லைனில் அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்தப் பிரச்சினைக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உடனடித் தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அனைத்து ஓட்டுநர்கள் சங்கங்கங்கள் ஒன்றிணைந்து, காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம்.
பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்துக!
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய மயிலாடுதுறை மாவட்டம் பிரிக்கப்பட்ட பின்னர், நலவாரிய அலுவலகம் செயல்படாமல் உள்ளது.
அதனைச் செயல்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரிக்குள் நுழையும், தமிழ்நாடு வாடகை வாகனங்களிடம் ரூ.100 கட்டாயம் வசூல்செய்யப்படுவதை நிறுத்த, முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
மேக்ஸி கேப் வாகனங்களில் ஏற்றிச்செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை 15 அல்லது 16 பேர் என உயர்த்த வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: ஓடும் இருசக்கர வாகனத்தில் 75 யோகாசனங்கள் செய்து அசத்திய இளைஞர்!