மயிலாடுதுறையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த கிரைண்டர், கேஸ் ஸ்டவ், நான்ஸ்டிக் தாவா ஆகிய பரிசுப் பொருள்கள் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை அருகே உள்ள சேந்தங்குடி அக்ரஹாரத்தில் ஆசிர்வாத் மைக்ரோ பைனான்ஸ் என்ற தனியார் நிறுவனத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி 62 மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு ரூ.28 லட்சத்து 70 ஆயிரம் கடன் தொகையை ஆன்லைன் மூலம் வழங்கியுள்ளது. இதற்காக அப்பகுதியில் சமூக இடைவெளியின்றி 150க்கும் மேற்பட்டோர் திரண்டு இருந்தனர்.
இதனையறிந்த பறக்கும் படை அலுவலர் விஜயராகவன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் விரைந்து சென்று தேர்தல் நடத்தை விதிகளை மீறி இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்ததுடன், தொடர்ந்து பணப் பரிவர்த்தனை செய்வதையும் தடுத்தனர்.
மேலும், அங்கு மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 7 கிரைண்டர்கள், 7 கேஸ் ஸ்டவ், 7 நான் ஸ்டிக் தவா ஆகிய ரூ.75 ஆயிரம் மதிப்புடைய பரிசுப் பொருள்களை பறிமுதல் செய்து, மயிலாடுதுறை தலைமையிடத்து துணை வட்டாட்சியர் எஸ்.சுகன்யாவிடம் ஒப்படைத்தார்.