நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அருகே திருச்சம்பள்ளியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திங்கட்கிழமையான நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது.
கரோனா தொற்றால் பருத்தி ஏலத்தில் தனியார் வியாபாரிகள் ஜூலை 6ஆம் தேதி வரை ஏலம் எடுப்பதில்லை என்று முடிவெடுத்து அறிவித்திருந்தனர். இதையடுத்து, ஒழுங்குமுறை விற்பனைக்கூட மாவட்ட செயலாளர் வித்யா, தனியார் வியாபாரிகளிடம் பேசி தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதைத் தெரிவித்து, தனியார் வியாபாரிகளை ஏலத்துக்கு அழைத்தார்.
அதன் பேரில், நேற்று வழக்கம்போல் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் இந்திய பருத்திக்கழக அலுவலர்கள் கலந்துகொண்டு, குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 5,550, குறைந்தபட்சமாக ரூ. 5,278 என சுமார் 1000 குவிண்டால் பருத்தியை கொள்முதல் செய்தனர்.
தனியார் வியாபாரிகள் குவிண்டால் ஒன்றுக்கு, அதிகபட்சமாக 4,700 ரூபாயும், குறைந்தபட்சமாக 3,300 ரூபாய்க்கும் 3,000 குவிண்டாலை கொள்முதல் செய்தனர்.