உலக நாட்டு மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் காரணமாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்த்துவருகின்றனர். குறிப்பாக கோயில், தேவாலயம், பேருந்து நிலையங்களில் வைரஸ் பரவுவதாக மருத்துவர்கள் கூறியதைத் தொடர்ந்து நாகை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் பொதுமக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
குறிப்பாக உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் வழக்கத்திற்கு மாறாக பக்தர்கள், சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் கடைகள் வெறிச்சோடி காணப்படுவதுடன், பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகள், பக்தர்களின் கூட்டம் வெகுவாக குறைந்ததால் மெழுகுவர்த்தி, பூ மாலை, பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் வெறிச்சோடி காணப்படுவதால், வியாபாரிகளுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், தவக்காலம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட வேளாங்கண்ணிக்கு அதிக அளவு பக்தர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையோடு இருந்த வியாபாரிகளுக்கு கொரோனோ அச்சுறுத்தல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கவலைத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:கொரோனாவால் தமிழ்நாடு உற்பத்தித் துறையில் பாதிப்பு இல்லை - அமைச்சர் எம்.சி. சம்பத்!