நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள மன்னம்பந்தல் தனியார் கல்லூரி விடுதிகள், சாய் விளையாட்டு அரங்க விடுதி, தனியார் லாட்ஜ் ஆகிவற்றில் சென்னை உள்ளிட்ட வெளியூர், வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் தங்கவைக்கப்பட்டனர். இவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்கு இவர்களின் சளி மாதிரிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதன் முடிவுகள் வெளிவர 5 நாள்கள் வரை ஆகிறது. இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் வசதிகள் குறைவாக உள்ளதாகவும், சுகாதாரமின்மையுடன் காணப்படுவதாகவும் அங்கு தங்க வைக்கப்பட்டிருக்கிறவர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து நேரடியாக எடுக்கப்பட்டுள்ள வீடியோ பதிவுகளை வாட்ஸ்அப் செயலியில் வெளியிட்டுள்ளனர்.
அந்த காணொலியில், ”சுமார் 70 பேர் அவ்விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒரு அறையில் இருவருக்கு தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் ஒருவருக்கு தொற்று வந்தாலும் அடுத்திருப்பவருக்கும் ஏற்படும் அபாயம் உள்ளது.
முறையாக சுத்திகரித்த குடிநீர், சுகாதாரமான கழிவறை போன்றவை ஏற்படுத்தப்படவில்லை. ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே கழிவறைகள் இன்றி மொத்தமாகவே 3 கழிவறைகள் மட்டுமே உள்ளன. இந்த கழிப்பறைகளிலும் விளக்குகள் சரிவர ஒளிராமல் கிடக்கின்றன. இதனால் இரவு நேரங்களில் அவதிப்படவேண்டியுள்ளது. குழந்தைகளுக்கு பால் வழங்குவதில்லை. அரசு ஊழியர்கள் உள்ளே வந்தால் கரோனா தொற்று ஏற்படும் என்ற அச்சத்தில் விடுதிக்கு உள்ளே வருவதே இல்லை” உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களை அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா நிவாரணம்: வீடுகளுக்குச் சென்று வழங்க மறுத்தால் கடும் நடவடிக்கை!