நாகை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் கங்கைகுளத்தெருவைச் சேர்ந்த அழகுராஜ். இவரது மகளுக்குத் திருமணம் செய்ய மூன்று மாதங்களுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் திருமண மண்டபம், சமையல், மேளதாளங்கள் அனைத்தும் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிலையில் கரோனா பெருந்தொற்று காரணமாக தமிழ்நாடு அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. மேலும் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டதால், நிச்சயித்த திருமணம் எப்பொழுது நடைபெறும் என்ற எண்ணம் மணமக்களின் பெற்றோர்களிடையே இருந்தது.
அதே நேரத்தில் திருமணம் குறிப்பிட்ட நேரத்தில் நடைபெற வேண்டும் என்ற எண்ணமும் அவர்களிடையே இருந்தது. இதனால் பெண்ணின் தாய், தந்தை மணமகனின் தாய், தந்தை என இரு வீட்டாரும் இன்று வைத்தீஸ்வரன் கோயிலில் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள மாரியம்மன் கோயிலில் வைத்து திருமணம் நடைபெற்றது.
இத்திருமண விழாவில் மணமக்களின் சில உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர். மேலும் அரசு விதித்த சமூக இடைவெளி, முகக் கவசங்கள் அணிந்து பத்து நபர்கள் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொண்டனர். மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது, அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ஊரடங்கிற்குப் பிறகும் மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது - ராமதாஸ்