தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. இந்நிலையில், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரையில் 11 பேர் நாகை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீர்காழி தாலுக்கா பகுதியில் யாருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்படவில்லை. ஆனால், டெல்லிக்குச் சென்று திரும்பிய நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நபர், சீர்காழி சபாநாயகர் தெருவில் உள்ள அவரது உறவினர் வீட்டில் 15 நாள்கள் தங்கியுள்ளார்.
இதனால் அவர் தங்கியிருந்த வீட்டை சுற்றி 10க்கும் மேற்பட்ட தெருக்களில் உள்ள பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத வகையில் நகராட்சி ஊழியர்கள், காவல் துறையினர் தடுப்புக் கட்டைகள் அமைத்து சீல் வைத்தனர்.
மேலும் அவர், வேறெங்கும் உள்ள அவரது உறவினர்கள் வீட்டிற்குச் சென்றாரா என விசாரணை செய்து, அவர் சந்தித்த நபர்களை தனிமைப்படுத்தும் பணியில், காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கடைகளும் மூட உத்தரவிட்டுள்ளது.