மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும்விதமாக, ரயில்வே பாதுகாப்புப் படையினர் நேற்று (டிசம்பர் 15) விழிப்புணர்வு நாடகமொன்றை நடத்தினர்.
இந்த நாடகமானது வெளியூர் செல்லும் தம்பதியினர், மோசடி பேர்வழிகள் தரும் உணவுப் பொருள்களை உட்கொண்டு மயக்கமடைந்து உடமைகளைத் தொலைத்து விடுவதுபோல சித்திரிக்கப்பட்டிருந்தது. அத்தம்பதியினருக்கு அப்பகுதி நாட்டாமை ஒருவர் அறிவுரை கூறுவது போன்ற காட்சிகளும் அதில் இடம்பெற்றிருந்தன.
பின்னர் சினிமா பாணியில் தத்ரூபமாக நடித்துக் காண்பித்த ரயில்வே பாதுகாப்புப் படையினரை பயணிகள் வெகுவாகப் பாராட்டினர். முன்னதாக ரயில் நிலையம் முன்பு பறை இசை வாசித்தும், துண்டுப்பிரதிகளை விநியோகித்தும் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதையும் படிங்க: 25 சவரன் தங்க நகைக்கொள்ளை... பெருங்களத்தூரில் அடுத்தடுத்து நிகழும் கொள்ளை;துப்பு கிடைக்காமல் திணறும் காவல் துறை!