நாகை மாவட்டம், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.ஆசைமணியை ஆதரித்து மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
அதிமுக பரப்புரை கூட்டத்தில் மக்கள் கூட்டம் கூடுவது இல்லை என்று மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். ஆனால் இங்கு கூடியுள்ள மக்களின் குரல் ஸ்டாலின் காது வரைக்கும் ஒலிக்கும். அந்தளவிற்கு மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. மு.க.ஸ்டாலின் பொம்மைபோல ஒரே இடத்தில் பரப்புரை செய்து வருகிறார். ஆனால், நான் மக்களோடு மக்களாக 125 கூட்டங்கள் வரை சென்று பரப்புரை செய்து உள்ளேன்.
கோதாவரி- காவிரி நதி நீர் இணைப்பு எங்கள் லட்சியத் திட்டம். அதை நிறைவேற்றியே தீருவோம். கடலில் வீணாக கலக்கும் கோதாவரி தண்ணீரை டெல்டா பகுதி பாசனத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 100 நாள் வேலைத்திட்டத்தை 206 ஆக உயர்த்த ஆவண செய்யப்படும். விவசாயம், தொழிற்சாலை இவை இரண்டுமே வளர்ச்சி அடைந்தால்தான் பொருளாதாரம் மேம்படும்.
திமுக தேர்தல் அறிக்கை என்பது வெட்டி அறிக்கை. பொய் அறிக்கையும் கூட. 15 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுகவால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை. அவர்களது குடும்ப உறுப்பினர்கள்தான் பயனடைந்தனர். காவிரி நீர் பிரச்னைக்காக திமுக எந்த குரலும் தரவில்லை. மத்தியில் நிலையான பிரதமர் அமைய மயிலாடுதுறை தொகுதி ஆசை மணிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள், என்றார்.
பரப்புரையில் முதலமைச்சர் அதிமுகவின் நலத்திட்டங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தபோது, மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று மக்கள் கோஷம் எழுப்பினர். இதனால் முதலமைச்சர் பேசும்போது இடையூறு ஏற்பட்டது. அமைதி காக்கக் கோரி அதிமுகவினர் கையசைத்தனர். ஆனால் முதலமைச்சர் அந்த சத்தத்தை காதில் வாங்கிக் கொள்ளாதது போல தொடர்ந்து பேசியது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.