உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் டிசம்பர் 25ஆம் தேதி இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்த நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையாகக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், இந்த ஆண்டும் கீழ்த்திசை நாடுகளின் லூர்து நகர் என அழைக்கப்படும், நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
முன்னதாக வேளாங்கண்ணி விண்மீன் ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலியினை பேராலய அதிபர் பிரபாகர் நிறைவேற்றினார். அதனைத் தொடர்ந்து, இயேசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டு, இயேசுவின் பாதத்தில் வைக்கப்பட்டிருந்த குடிலில் பிறந்த குழந்தையை பாதிரியார்கள் முத்தமிட்டனர்.
பின்னர், குழந்தை இயேசு பிறப்பின் போது ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். இவ்விழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டு கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா பேராலயம், திரு இருதய மேற்றிராசன ஆலயம், புனித அந்தோனியார் ஆலயம், தூய பேட்ரிக் தேவாலயம், தூய பேதுருதேவாலயம் உள்ளிட்ட நகரின் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஏஎல்சி கார்மல் சர்ச் தேவாலயத்தில் இரவு சிறப்பு வழிப்பாடு தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்த சிறப்பு வழிப்பாட்டில் 500க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சமாதானத்தை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதில், குறிப்பாக வேலூர் கஸ்பா பகுதியில் உள்ள விண்ணேற்பு அன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு வழிப்பாடு நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதையடுத்து, சேலம் மாவட்டத்தில் உள்ள குழந்தை ஏசு தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு, திருப்பலியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் பங்கேற்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அனைத்து தேவாலயங்கள், பேராலயங்களில் குடில்கள் அமைக்கப்பட்டு, அங்குள்ள வீடுகளிலும், கட்டடங்களிலும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.
கிறிஸ்துமஸ் பண்டிகை குறித்து செய்தியாளர்களிடம் கிறிஸ்தவர்கள் கூறுகையில், உலக மக்கள் அன்பில் திழைக்கவும் வரும் 2020ஆம் ஆண்டு தொழில்வளம் பெருகி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழவும், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை மாறி சமாதானம் பரவவும் இறைவனிடம் வழிபாடு செய்ததாகத் தெரிவித்தனர்.
மேலும், கிறிஸ்துமஸ் விழாவையொட்டி இன்று காலை வேளாங்கண்ணி பேராலயத்தில் தமிழில் சிறப்பு திருப்பலியும், மலையாளம், கன்னடம், இந்தி, கொங்கணி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘கிறிஸ்துமஸ் குடிலிலும் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு’ - தூத்துக்குடி தம்பதியின் புரட்சிகர குடில்!