மயிலாடுதுறையில் உள்ள அரசினர் பெரியார் மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு மற்றும் தாய்-சேய் நலப்பிரிவு ஆகிய பிரிவுகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளான குத்தாலம், தரங்கம்பாடி தாலுகாகளில் அரசு மருத்துவமனை உள்ளபோதும், அங்கிருந்து பெரும்பாலான கர்ப்பணிகள் இங்குதான் பிரசவத்துக்காக வருகின்றனர்.
தாலுகா மருத்துவமனையாக இருந்தபோதும் தமிழ்நாட்டிலேயே சிறந்த மகப்பேறு சிகிச்சையில் இம்மருத்துவமனை இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. முன்னர், இந்த மருத்துவமனையில் சராசரியாக 500 பிரசவங்கள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த மாதம் அதன் விகிதாச்சாரம் 22 விழுக்காடு அதிகரித்துள்ளது.
கடந்த ஒரே மாதத்தில் 610 குழந்தைகள் இம்மருத்துவமனையில் பிரசவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மாவட்ட அளவிலான அரசு மருத்துவமனையில் நடைபெற்றுள்ள பிரசவங்களைவிட இது அதிகம். கரோனா சிகிச்சை பரவல் காரணமாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகளே வருவதற்கு அச்சப்படும் இச்சூழலிலும் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மருத்துவர்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தாலுகா மருத்துவமனையான பெரியார் மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டால் பிரசவங்களுக்காக வரும் கர்ப்பிணிகள் எண்ணிக்கை இன்னும் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:இரட்டிப்பான பிரசவங்கள்... குழந்தைகள் வாசனையால் நிரம்பிய அரியலூர் மருத்துவமனை!