நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள சுமார் 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நாகூர் தர்காவிற்கு கிழக்கு பகுதியில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் உள்ள குளம் ஒன்று உள்ளது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த குளத்தை சுற்றி நான்குபுறங்களிலும் உயர்ந்த குடியிருப்பு மாடிக் கட்டடங்கள் , வியாபாரத் தலங்கள், வழிபாட்டு கூடங்கள் உள்ளன.
அண்மையில் குளத்தின் தடுப்புச்சுவர் சீரமைப்பதற்கான திட்ட மதிப்பீட்டினை பொதுப்பணித் துறை தயாரித்து, தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் முதன்மைச் செயல் அலுவலரின் மூலமாக அரசுக்கு சமர்ப்பித்தது. அதனை அரசு ஆய்வு செய்து, 4 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாகூர் தர்கா குளத்தின் நான்குபுற தடுப்புச் சுவர்களை புதுப்பித்துக் கட்டும் பணிக்கு ஆணை வெளியிட்டது.
அதன்படி நாகூர் தர்கா குளத்தின் நான்குபுறத் தடுப்புச் சுவரை புதுப்பித்துக் கட்டப்படும் பணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப்.5) அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், நிலோபர் கபில், வளர்மதி , தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.