நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கடந்த சில மாதங்களாக சாலைகளில் நடந்து செல்பவர்களிடம் இருசக்கர வாகனத்தில் வந்து செல்போன்களை திருடிச் செல்வது அதிகரித்து வந்தது. இதுகுறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு புகார் வந்த வண்ணம் உள்ளது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையாகக் கொண்டு காவல் துறை தீவிரமாகத் தேடிவந்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிங்காரவேல் தலைமையில் காவலர்கள் சேந்தங்குடி பகுதியில் வாகன சோதனையில ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த நான்கு நபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர். அதில், மணக்குடியைச் சேர்ந்த ராம்குமார்(22), வசந்த்(19), கார்த்தி(21), விவேக்(22) என்பதும் செல்பொன்களை திருடும் கும்பல் என்பதைக் கண்டுபிடித்து கைது செய்தனர். மேலும், செல்பொன்களைத் திருடும் அகரமணக்குடியைச் சேர்ந்த கீர்த்திவாசன்(20) கீழிருப்பைச் சேர்ந்த கார்த்தி(19) ஆகியோரையும் கைது செய்தனர்.
இவர்கள் இரவில் மட்டுமே செல்பொன் திருட்டில் ஈடுபட்டதாகவும், குடிப்பதற்காக செல்போன்களைத் திருடியதாகக் கூறியுள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ. 27 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்களைப் பறிமுதல் செய்தனர். பின்னர் இது தொடர்பாக 6 பேர் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: புதுச்சேரியிலிருந்து கடத்தி வரப்பட்ட 3,360 மதுபாட்டில்கள் பறிமுதல்!