மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரத்துக்கு மேற்பட்ட புறநோயாளிகளும், 200க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மகப்பேறு பிரிவு, ரத்தவங்கி, சிசு பராமரிப்பு பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, பல் மருத்துவ பிரிவு என பல்வேறு கட்ட வசதிகளுடன் மருத்துவமனை தற்போது தரம் உயர்த்தப்பட்டு செயல்படுகிறது.
இதனிடையே, சீர்காழி அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வசதி இல்லாததால் அவசர பரிசோதனைக்கு சிதம்பரம், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நோயாளிகள் பரிந்துரைக்கப்பட்டு அலைகழிக்கப்படுகின்றனர். இது குறித்து, அண்மையில் சீர்காழி பகுதிக்கு கனமழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம், சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி.பாரதி அரசு மருத்துவமனைக்கு சிடி ஸ்கேன் வசதி அமைத்துதர கோரிக்கை விடுத்தார்.
அதை பரிசீலித்து முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டுச் சென்ற அமைச்சர், சீர்காழி அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வசதி அமைக்க ஏற்பாடு செய்தார். இதைத் தொடர்ந்து சீர்காழி அரசு மருத்துவமனை, பழைய அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் சிடி ஸ்கேன் சென்டர் எங்கு அமைப்பது, அதற்கான மின்சார தேவைக்கு தனி மின்பாதை ஏற்படுத்தி மின்மாற்றி அமைப்பது ஆகியவை குறித்து சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி.பாரதி ஆய்வு செய்து அரசு அலுவலர்களுடன் கலந்துரையாடினார்.