மயிலாடுதுறை: 'என் கார் வரும்போது சாலையில் வந்தது. உங்கள் தவறு; நீங்கள் பார்த்து போங்கள்' என்பதைப் போல சொகுசு காரில் உல்லாசப் பயணம் செய்து, பாதசாரிகள் மீது சேற்றை அள்ளி வீசிச்செல்லும் பல மனிதர்களிடையே, இங்கு ஒரு மனிதர் காரை நிறுத்தி விட்டு தவறுக்கு மன்னிப்புக்கேட்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
செம்பனார்கோவில் அருகே காளஹஸ்திநாதபுரம் பகுதியில் இன்று (செப்.2) சாலையோரமாக சிலர் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று சாலையிலிருந்த மழைநீரை அங்கிருந்தவர்களின் மீது வாரி அடித்தது.
இதனையறிந்த அக்காரின் ஓட்டுநர், உடனே பணிவுடன் காரை விட்டு இறங்கி, அங்கிருந்தவர்களிடம் மரியாதையுடன் ’தெரியாமல் நடந்து விட்டது. மன்னியுங்கள்' என கைகூப்பி மன்னிப்புகோரினார்.
அப்போது அங்கிருந்தவர்கள் 'பரவாயில்லை.. போயிட்டு வாங்க தம்பி..' என்று பெருந்தன்மையுடன் சொல்லி அனுப்பினர்.
செய்த தவறை உணர்ந்து மன்னிப்புகோரிய கார் ஓட்டுநரின் இச்செயலை எண்ணி, அங்கிருந்த அனைவரும் நெகிழ்ச்சி அடைந்தனர். இக்காட்சி அங்குள்ள கடை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க: விடுதலை - காட்சிக்குப் பின்னால்