மயிலாடுதுறை: மன்னம்பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி மீனாட்சி. இந்த தம்பதி தங்களது உறவினர் திருமணத்திற்காக இன்று (ஜன.23) காலை, காரில் காரைக்கால் வரை சென்றனர். தொடர்ந்து திருமணத்தை முடித்துவிட்டு தரங்கம்பாடி வழியாக ஒழுகைமங்கலம் பகுதியில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது சிதம்பரத்திலிருந்து ஆக்கூர், திருக்கடையூர் வழியாகக் காரைக்கால் செல்லக்கூடிய அரசு பேருந்து ஒன்று, ஒழுகைமங்கலம் பகுதியில் உள்ள வளைவில் வேகமாகச் திரும்பியது. அப்போது எதிரே வந்த கார் மீது அரசு பேருந்து மோதியதில், காரில் பயணம் செய்த பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி மீனாட்சி ஆகியோர் படுகாயமடைந்தனர்.
உடனடியாக அருகிலிருந்தவர்கள் இருவரையும் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநர், பேருந்தினை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொறையார் காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது அரசு பேருந்து காரின் மீது அதிவேகமாகச் சென்று மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: குழந்தைகளோடு மனைவியை கொன்று புதைத்த ரயில்வே ஊழியர்