குறுவை சாகுபடிக்காக மேட்டூரிலிருந்து கடந்த 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. ஒப்பந்தத் தேதியின் அடிப்படையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு குறுவை சாகுபடிக்காகத் திறக்கப்பட்ட தண்ணீர் விரைவில் வந்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் டெல்டா மாவட்டங்களில் முன்னதாகவே குடிமராமத்து, தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், மேட்டூரிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்றிரவு கடைமடைப் பகுதியான நாகை மாவட்டம் மயிலாடுதுறை எல்லையான திருவாலங்காடு காவிரி, விக்ரமன் ஆறுகளின் தலைப்புப் பகுதியில் உள்ள நீர்த்தேக்கிக்குத் (சட்ரஸ்) தண்ணீர் வந்தடைந்தது.
இன்று காலை நீர்த்தேக்கியிலிருந்து, முதல்கட்டமாக 712 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதற்காக நீர்த்தேக்கியில், சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பொதுப்பணித் துறை உதவிப்பொறியாளர் விஜயபாஸ்கர் முன்னிலையில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதில் பொதுமக்கள், விவசாயிகள் கலந்துகொண்டு திறக்கப்பட்ட தண்ணீருக்கு மலர்த்தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
விவசாயிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று காவிரி நீரை வழிபட்டனர். மேட்டூர் அணையின் விதிகளின்படி, காவிரி கடலுடன் கலக்கும் பூம்புகாருக்கு முன்னதாக, மேலையூர் கடையணை பகுதிக்குத் தண்ணீர் சென்றுசேர்ந்த பின்னர், மற்ற கிளை ஆறுகள், வாய்க்கால்களுக்குத் தண்ணீர் பிரித்து அனுப்பப்படும்.
இதன்படி இன்னும் ஓரிரு நாள்களில், நீர்ப்பாசனத்திற்காகத் தண்ணீர்ப் பகிர்ந்து அளிக்கப்படும் என்று பொதுப்பணித் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இந்தாண்டு ஜுன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டதால் தற்போது கடைமடைப் பகுதிக்குத் தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும் குறுவை சாகுபடிக்குத் தேவையான விதைகள், உரங்களை இருப்புவைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
காவிரி, கிளை ஆறுகள் மூலம் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.