உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டு பெருவிழா ஆகஸ்ட்29ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது. இந்நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் வருவதற்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
மேலும் பக்தர்கள் வேளாங்கண்ணி வருவதை தடுக்கும் வகையில், பாதைகள் அடைக்கப்பட்டு காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், கடல்வழி படகில் சிலர் வருவதை கண்காணித்துள்ளனர்.
பின்னர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் திருவள்ளூர் மாவட்டம் புல்லரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தூயவன்(32), தினேஷ்(32), சென்னையைச் சேர்ந்த மேகநாதன்(32), ஜேம்ஸ் ஆம்ஸ்ட்ராங்க், டேனியல், ஆரோக்கியசாமி, விஜய் ராபர்ட் ஆகியொர் என்பதும், காரை ஊருக்கு வெளியே நிறுத்திவிட்டு கடல்வழியாக வேளாங்கண்ணி திருவிழாவில் கலந்துகொள்ள வந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து ஏழு பேர் மீதும் ஊரடங்கு உத்தரவை மீறியதாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:பெண்ணின் அந்தரங்க படங்களை வைத்து மிரட்டியவருக்கு போலீஸ் வலைவீச்சு!