மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளராக இருப்பவர் எஸ்.பவுன்ராஜ். இவர் பூம்புகார் தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறையாக எம்.எல்.ஏவாக இருந்தவர்.
அன்மையில் நடந்து முடிந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் பூம்புகார் தொகுதியில் அதிமுக சார்பில் எஸ்.பவுன்ராஜ் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
கொலை மிரட்டல்
தேர்தலின்போது பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட எடக்குடி கிராமத்தில் வாக்களர்களுக்கு பணம் கொடுப்பதற்காக எடக்குடி அதிமுக ஊராட்சி தலைவர் தங்கமணி (56) என்பவரிடம் பவுன்ராஜ் பணம்கொடுத்துள்ளார்.
அதற்கு தங்கமணி சட்ட விதிமுறைகளை மீறி பணம் கொடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் அதிமுகவில் இருந்து விலகி தங்கமணி திமுகவில் இணைந்தார்.
இந்நிலையில் அதிமுக வேட்பாளராக இருந்த பவுன்ராஜ், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மறுத்ததால் கொலை மிரட்டல் விடுத்ததாக தங்கமணி பெரம்பூர் காவல் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி புகார் அளித்திருந்தார்.
ஆனால் இது குறித்து காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தேர்தல் முடிந்த பிறகு ஏப்ரல் 23ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தங்கமணி மனுத்தாக்கல் செய்தார்.
வழக்கு பதிவு
இதற்கு கீழமை நீதிமன்றத்தை அணுகி தீர்வுபெற்றுக்கொள்ள அறிவுருத்தப்பட்டது. இதையடுத்து மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் தங்கமணி மனுத்தாக்கல் செய்தார்.
அதனை விசாரித்த மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி அப்துல்கனி, பவுன்ராஜ் மீது இந்திய தண்டனை சட்ட பிரிவு 506(2)ன் கீழ் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்து, உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டிருந்தார்.
உத்தரவின் அடிப்படையில் பெரம்பூர் காவல் துறையினர் இன்று (செப்டம்பர் 5) பூம்புகார் முன்னாள் எம்.எல்.ஏ.பவுன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: நிர்வாணப் படத்தை வெளியிட்ட இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த ஊர் மக்கள்