நாகப்பட்டினம்: மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை பிரதமர் நரேந்திர மோடியால் காணொளிக் காட்சி வாயிலாக பயணிகள் கப்பல் சேவை நேற்று (அக்-14) துவக்கி வைக்கப்பட்டது.
இதற்காக ரூ.3 கோடி மதிப்பீட்டில் நாகபட்டினம் துறைமுகத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், ரூ.25 கோடி மதிப்பீட்டில் "செரியாபாணி" என பெயரிட்டப்பட்ட கப்பல் கொச்சினில் இருந்து நாகைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் கப்பலின் சோதனை ஓட்டம் நாகை துறைமுகத்தில் இருந்து கடந்த அக்டோபர் 8 மற்றும் 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது.
இந்நிலையில், முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் கூடிய "செரியாபாணி" கப்பல் 50 பயணிகளுடன் நேற்று (அக்-14) நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றது. இந்நிலையில், இன்று (அக்-15) போதிய அளவு டிக்கெட் முன்பதிவு இல்லாத காரணத்தினால், பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மேலும், வாரத்தில் 3 நாள்கள் மட்டும் கப்பல் போக்குவரத்து இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் மட்டும் கப்பல் போக்குவரத்து இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை காலை மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தில் "ஜெய் ஸ்ரீராம்" கோஷம்.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!