நாகப்பட்டினம், வேதாரண்யம் பகுதிகளில் இயங்கும் தனியார் பேருந்துகள் அதிவேகமாக செல்வதால் விபத்துகள் நடப்பது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில், பகவான் என்ற தனியார் பேருந்து வேதாரண்யத்திலிருந்து திருவாரூர் நோக்கி 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்தது.
அப்போது, தலைஞாயிறு அடுத்துள்ள ஆலங்குடி அருகே வந்த தனியார் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வயலில் பயங்கர சப்தத்துடன் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
மக்கள் அலறும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் காயமுற்றவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் அளித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் காயமடைந்த பயணிகளை மீட்டு 108 வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த பயங்கர விபத்தில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் ரமேஷ் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் சிக்கிய பிரேமா, வாசுகி ஆகிய இருவர் வாய் கிழிந்தும், கை முறிந்தும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், இந்த விபத்து குறித்து தலைஞாயிறு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆபத்தை உணராமல் நாகை இளைஞர் செய்த செயல் - வைரலாகும் வீடியோ..!