மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே காரைமேடு கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன்(வயது 61) என்பவரின் மனைவி தையல்நாயகி.
மாற்று திறனாளியான இவருக்கு அதற்குரிய சான்றும், உதவி தொகையும் வழங்க தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு தனி தாசில்தார் பாலமுருகனிடம் விண்ணப்பித்திருந்தார்.
ஆனால், சான்றிதழுக்கும், உதவித் தொகைக்கும் ரூ. 2000 லஞ்சம் தர வேண்டும் என்று பாலமுருகன் கேட்டதாக தெரிகிறது. அதேசமயம், லஞ்சம் கொடுக்க மனம் இல்லாததால் இதுகுறித்து நாகை லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் ராமச்சந்திரன் புகார் மனு கொடுத்தார்.
புகாரை பெற்றுக்கொண்ட நாகை லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் துணை சூப்பிரண்ட் சித்திரவேலு தலைமையில் லஞ்சம் ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார், அருள்மொழி மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் தரங்கம்பாடி தாசில்தார் அலுவலகத்திற்கு மாறுவேடத்தில் வந்தனர்.
அப்போது ராமச்சந்திரனிடம் போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ. 2 ஆயிரத்தை கொடுத்தனுப்பி ரகசியமாக கண்காணித்தனர். அப்போது பணத்தை பெற்றுக்கொண்ட தனி தாசில்தார் பாலமுருகனை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக பிடித்தனர்.