நாகப்பட்டினம்: திருப்பூண்டி சிந்தாமணியைச் சேர்ந்தவர், சுப்பிரமணியன். இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி புவனேஷ்ராம் என்பவர் உடன், திருப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு நேற்று இரவு 12 மணிக்கு வந்துள்ளார்.
அப்போது அங்கு பணியில் இருக்க வேண்டிய மருத்துவர் அரவிந்தன் பணியில் இல்லை என கூறப்படுகிறது. அதேநேரம், சுப்பிரமணியன் நெஞ்சு வலியால் துடித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாஜக நிர்வாகி புவனேஷ்வராம், அங்கிருந்த செவிலியர்களிடம் ‘பணி நேரத்தில் மருத்துவர் யாரும் இல்லையா?’ என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த பெண் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் சுப்பிரமணியை பரிசோதித்துள்ளனர். மேலும், சுப்பிரமணியனை நாகை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்ப அறிவுறுத்தி உள்ளனர். அப்போது பெண் மருத்துவரை, ”ஹிஜாப் எதற்கு அணிந்துள்ளீர்கள்? உங்கள் யூனிபார்ம் எங்கே? நீங்கள் டாக்டர் என்பதற்கு என்ன அடையாளம்?” என்று கேட்டது மட்டுமல்லாமல், அந்த மருத்துவரை செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளார்.
இவ்வாறு பாஜக நிர்வாகி இரவு நேரத்தில் பெண் அரசு மருத்துவரை யூனிபார்ம் அணியாமல் ஹிஜாப்பை ஏன் அணிந்துள்ளீர்கள் என வாக்கு வாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இதனை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் சமூக, இஸ்லாமிய அமைப்புகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேளாங்கண்ணி - தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை திருப்பூண்டி பகுதியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தில் கம்யூனிஸ்ட், விசிக, மமக மற்றும் மஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பங்கேற்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதனிடையே, அரசு மருத்துவரை ஹிஜாப்பை கழற்றச் சொல்லி ரகளையில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி புவனேஷ்வராம் மீது அரசு மருத்துவரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மத உணர்வைத் தூண்டுவது, பெண் மருத்துவர் மற்றும் செவிலியர்களை அனுமதி இல்லாமல் வீடியோ எடுத்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழையூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் கீழ், பாஜக நிர்வாகியை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர். பின்னர் இது குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகை டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையிலான காவல் துறையினர், சம்பந்தப்பட்ட நபரை விரைந்து கைது செய்வதாக உறுதி அளித்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில், நெஞ்சு வலி காரணமாக நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சுப்ரமணியன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கு திருப்பூண்டி மருத்துவமனையில் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததே காரணம் என பாஜகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும், இது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் வெளியிட்டுள்ள கண்டன செய்தியில், “நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் இரவுப் பணியில் இருந்தபோது, இருதய நோயாளி ஒருவரை சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர்.
அவருக்கு உரிய சிகிச்சை வழங்கி மேல் சிகிச்சைக்காக நாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன் பின்னர், அந்த நோயாளி உடன் வந்ததாக கூறிக் கொண்ட நபர் ஒருவர், பணியில் இருந்த பெண் மருத்துவரை ‘ஏன் ஹிஜாப் அணிந்திருக்கிருக்கிறீர்கள்? அதை அனுமதிக்க முடியாது’ என மிரட்டியதோடு மட்டுமின்றி, அனுமதியின்றி வீடியோ எடுத்திருக்கிறார்.
தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் இந்த சமூக விரோத, மதவெறிச் செயல்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறது. அந்த நபர் மீது மருத்துவமனைகள் பாதுகாப்பு சட்டம் HPA 48/2008 கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம். அதேநேரம், தமிழ்நாடு முதலமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, இத்தகைய சமூக விரோத நடவடிக்கைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி, தொடக்கத்திலேயே கிள்ளி எறிய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பாகிஸ்தானில் ஹிஜாப் கட்டாயம்! அரசின் உத்தரவால் மாணவிகள், பெண்கள் அதிருப்தி!