மயிலாடுதுறை: உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் புதிய வளாகத்தை நரேந்திர மோடி இன்று (டிசம்பர் 13) திறந்துவைத்தார். அதன் நேரடி ஒளிபரப்பை பாஜக மகளிர் அணி தேசிய தலைவியும், தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருவாவடுதுறை ஆதீனத்தில் 24ஆவது குருமகா சன்னிதானத்துடன் இணைந்து கண்டார்.
இதற்காக மயிலாடுதுறை வந்த வானதி சீனிவாசன், இன்று காலை காவிரி துலாக் கட்டத்தில் கணவர் சீனிவாசனுடன் புனித நீராடி காவிரிக்கு மகா ஆரத்தி எடுத்து வழிபட்டார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய வானதி சீனிவாசன், "தமிழ்நாட்டில் இன்று தமிழ் காப்பாற்றப்பட்டு வாழ்ந்து கொண்டிருப்பதற்கு மிக முக்கியக் காரணங்கள் ஆதீனங்களின் சிறப்பான பணிகளே ஆகும்.
பழங்காலத்தில் வித்வான்களை ஊக்குவித்து தமிழ்ச் சுவடிகளைக் கண்டறிந்து தமிழ் மொழியை வளர்ப்பதற்கு ஆதீனங்கள் மிகச்சிறந்த பணிகளைச் செய்துள்ளனர். நாட்டு மக்கள் நலமுடன் வாழ, நரேந்திர மோடி நீண்ட ஆயுளோடு வாழ பிரார்த்தனை செய்தோம்" என்று கூறினார்.
பாஜக மாவட்டத் தலைவர் வெங்கடேசன், மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சேதுராமன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: அமித் ஷா முதல் வாழவைத்த தெய்வங்கள் வரை: லிஸ்ட் போட்டு நன்றி சொன்ன ரஜினி!