மயிலாடுதுறை: சூறைக்காற்றில் 5 ஆயிரம் வாழை மரங்கள் தரையில் சாய்ந்து முற்றிலும் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோயில் ஒன்றியத்திற்கு உள்பட்ட கீழையூர், கிடாரங்கொண்டான், காளகஸ்தினாதபுரம், பொன்செய் உள்ளிட்ட கிராமங்களில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். ஒரு ஏக்கரில் ஆயிரம் மரங்களை நட்டு 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்து வாழை மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை சூறைக்காற்றுடன் பெய்த மழையால் கீழையூர், கிடாரங்கொண்டான் பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தரையில் சாய்ந்து முற்றிலும் சேதமடைந்தன. அறுவடை செய்ய வேண்டிய நிலையில் வாழை மரங்கள் முறிந்து விழுந்தும், வேரோடு சாய்ந்தும் சேதம் அடைந்தது.
10 மாதத்தில் பலன் தரக்கூடிய வாழை மரங்கள் தாருடன் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து நிற்பதால் அவை மொட்டு விடாமல் போக வாய்ப்புள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சென்ற ஆண்டு நிவர், புரெவி புயல்களால் வாழை விவசாயம் பாதிக்கப்பட்டபோது நிவாரணம் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், ஒன்றிய அரசு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்திருந்தும் இதுவரை காப்பீட்டுத் தொகை வழங்கவில்லை என்றும் விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.
எனவே, பயிர் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கவும், தற்போது சூறைக்காற்றால் சேதமடைந்த வாழை மரங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: வீடு, வீடாக சென்று கரோனா பரிசோதனை: மாவட்ட ஆட்சியர் லலிதா