மயிலாடுதுறை: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சென்னையைச் சேர்ந்த ‘அவர் இந்தியா’ தொண்டு நிறுவனம் சார்பாக மூன்று இளம்பெண்கள் மூன்று இருசக்கர வாகனங்களில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
மயிலாடுதுறையை சேர்ந்த சமூக ஆர்வலர் மும்தாஜ் சிம்ரின்பானு, சென்னையை சேர்ந்த சுகன்யா, திருச்சியைச் சேர்ந்த மருத்துவ மாணவி அனிஷா ஆகிய இம்மூவரும் மார்ச் 1ஆம் தேதி சென்னையில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டம் வழியே 9ஆவது மாவட்டமாக நேற்று (மார்ச் 7) மயிலாடுதுறை வந்தடைந்தனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மயிலாடுதுறை அருகே சித்தர்காட்டில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு வழங்கிபேசினர். இதைத்தொடர்ந்து மயிலாடுதுறை டிஎஸ்பி அண்ணாத்துரையை சந்தித்து வாழ்த்துப் பெற்ற பிரச்சாரக்குழுவினர் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் ரீதியான துன்பத்திற்கு உள்ளாவதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று பள்ளி கல்லூரி மாணவிகள், கிராமப்புற பெண்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருவதாகவும், பாலியல் சீண்டல்கள், பிரச்னைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் ஆபத்தில் உதவும் காவலன் செயலி உள்ளிட்ட பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பெண்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தனர்.
தொடாந்து இருசக்கர வாகனத்தில் காரைக்கால், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு புறப்பட்டுச் சென்றனர்.
இதையும் படிங்க: உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற நகை - பணம் பறிமுதல்