நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே குளிச்சார் ஊராட்சிக்குட்பட்ட அரும்பூர் கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 35 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட அரும்பூருக்குச் செல்லும் ஒரு கிலோ மீட்டர் சாலை தற்போது பழுதாகி குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்கு வாகனங்களைப் பயன்படுத்த சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறும் கிராம மக்கள் குடிநீரில் கால்நடைகளை குளிப்பாட்டிய கழிவுநீர் கலப்பதாகக் கூறி கவலை தெரிவிக்கின்றனர். இதனால் நோய்த்தொற்று ஏற்படும் என்பதால் அவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
மேலும், தங்கள் கிராமத்தில் கொசுமருந்து அடிக்கவில்லை என்றும், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை ஊராட்சி நிர்வாகம் முறையாக செயல்படுத்தவில்லை எனவும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தங்கள் கிராமத்திற்கு அடிப்படை வசதிகளை செய்து தருமாறு அரசிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.