நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் துளசியாப்பட்டினத்தைச் சேர்ந்தவர் இப்ராஹீம்ஷா. அண்மையில் இவர், சவுதி அரேபியாவிலிருந்து சொந்த ஊருக்கு வந்தார். அதன்பின் அவர் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கோவிட்-19 பரிசோதனைக்குச் சென்றார். அங்கு போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் அவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு கோவிட்-19 பாதிப்பில்லை என்பதை உறுதி செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சமூக வலைதளங்களில் தன்னை மருத்துவர் எனக் கூறிக்கொண்டு, இப்ராஹிம்ஷாவுக்கு கோவிட்-19 பாதிப்பிருப்பதாகக்கூறி வதந்தியை பரப்பினார்.
அதைக்கண்டு மனமுடைந்த இப்ராஹீம்ஷா, தன்னைப்பற்றி தவறான தகவல்களை பரப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயரிடம் புகார் மனு அளித்தார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் பிரவீன் நாயர், "நலமாக இருக்கும் நபர்களுக்கு, கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் அவர்கள் 1897 பொது சுகாதாரம், இந்திய தண்டனைச் சட்டம் 180 படி, எவ்வித விசாரணையும் இன்றி கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்தார்.
இதையும் படிங்க: கரோனா அறிகுறியுடன் 24 பேர் தனிவார்டில் கண்காணிப்பு - மக்கள் நல்வாழ்வுத் துறை