மயிலாடுதுறை அருகே மேலமாப்படுகை கன்னித்தோப்பு தெருவைச் சேர்ந்தவர் விஜய் (23). பாலிடெக்னிக் பயின்ற இவர், சென்னையில் வேலை பார்த்துவந்தார். இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 29) மதியம் விஜய் இருசக்கர வாகனத்தில் தனது வீட்டுக்குச் சென்றபோது, சாலையில் சென்று கொண்டிருந்த மனோகர் (55) என்பவரின் இருசக்கர வாகனம் மீது லேசாக உரசியது.
இந்த விவகாரத்தில் விஜய்க்கும், மனோகருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் மனோகரும், அவரது தரப்பினரும் விஜயை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, விஜயும் அவரது தரப்பினரும் மனோகர் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டனர். அப்போது, மனோகர் தரப்பைச் சேர்ந்த ஒருவர் விஜய்யின் வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில், விஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையும் படிங்க: லேசாக பைக் உரசியதுக்காக இளைஞர் குத்திக் கொலை!
தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் தலைமையிலான மயிலாடுதுறை காவல் துறையினர், சம்பவ இடத்துக்குச் சென்று விஜய்யின் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். இதைத் தொடர்ந்து, மனோகர், அவரது சகோதரர் சுந்தர்ராஜ், செல்வ மனோ, அன்புசெல்வன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரண்டு தரப்பினரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மாப்படுகை கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் அந்த கிராமம், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்தவருக்கு போலீஸ் வலை!