நாகை மாவட்டம் பொறையார் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகனங்கள் திருடுபோவதாக காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. இந்நிலையில் திருக்கடையூர் பேருந்து நிறுத்தம் அருகில் காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த முதியவரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணம் இல்லை என்பது தெரியவந்தது. மேலும், அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்துள்ளனர்.
விசாரணையில் முதியவர் காரைக்காலை சேர்ந்த டி. சில்வா (62) என்பதும், அவர் கடந்த சில மாதங்களாக பொறையாறு, காரைக்கால் , திருக்கடையூர், தரங்கம்பாடி, ஆயப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்துவந்ததும் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து முதியவர் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் அவரிடமிருந்த நான்கு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: தொடர் மணல் திருட்டு - மூன்று பேர் கைது!