நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நரசிங்க நத்தம் கிராமத்தில் ஒருமுறை உழவுசெய்து மூன்று முறை அறுவடை செய்கின்ற தமிழர் வேளாண்மை அறிமுகக் கூட்டம், கருத்தரங்கம் நடைபெற்றது.
நரசிங்கநத்தம் விவசாயி ஞானப்பிரகாசம் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் தமிழ்நாட்டின் பாரம்பரிய முறையில் பல்லடுக்கு விவசாயம் செய்கின்ற விவசாயிகள் கலந்துகொண்டனர்.
இந்தக் கருத்தரங்கில், “தமிழர் விவசாய முறை என்பது பல்லடுக்கு விவசாயம். சுமார் ஒரு ஏக்கர் வயலில் தென்னை, பலா, மா, எலுமிச்சை, புளியமரம், கொய்யா, மஞ்சள், கத்தரி என வரப்புகளை அகலமாக அமைத்து அதில் பயிரிடுவது. மேலும் மழைக்காலங்களில் வருகின்ற நீர் காரணமாக அகலமான வரப்புகளில் நீர்க்கசிவு ஏற்படாமல் நிலத்தில் தேங்கி இதில் ஒருமுறை நெல் பயிரிட்டால் இரண்டுமுறை அறுவடை செய்யலாம்” எனக் கூறப்பட்டது.
மேலும் கருத்தரங்கில், “தமிழர் விவசாயம் என்பது நிலத்தை முல்லை, மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை என ஐந்து வகையாக பிரித்து அதில் நெய்தல் நிலத்தை செயற்கையாக உருவாக்கி அதில் உணவு உற்பத்தியை தொடங்குவதே பல்லடுக்கு விவசாயம்.
அதாவது ஒரு ஏக்கர் நிலத்தில் 20 மா, 30 தென்னை, 20 பலா ஆகியவற்றை அமைத்து மஞ்சள், வாழை, கரும்பு உள்ளிட்ட பல வகையான காய்கறிகளையும் வரப்புகளில் பயிரிடுவது ஆகும்.
மேலும் வயலில் ஒருமுறை நடவுசெய்து நீரைத் தேக்கிவைப்பதால் இரண்டுமுறை அறுவடை செய்யலாம். பூச்சிக்கொல்லி மருந்துகள் உரங்கள் தேவை இல்லை. பயிர்கள் நன்றாக வளரும்” எனவும் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: குன்னூரில் ஸ்பெஷாலிட்டி தேயிலைத் தூள் கண்காட்சி!