மயிலாடுதுறை: தமிழர்களின் பாரம்பரியமிக்க ஆடி 18 ஆம் தினமான, ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் காவிரி, அதன் கிளையாறுகள், மற்றும் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் புதுமண தம்பதிகள் மட்டுமின்றி, பெரியவர்கள், சிறுவர், சிறுமியர்கள் என அனைவரும் காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் காவிரியை வழிபடுவார்கள்.
முக்கியமாக புதுமண தம்பதிகள் தாலிக்கயிறு பிரித்து புதிய கயிறு கோர்க்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். இந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற காவிரி துலா கட்டத்தில், இன்று அதிகாலை முதல் பொதுமக்கள் இரு காவிரி கரைகளிலும் கூடி காதாலகருகமணி, தாலிக்கயிறு, பேரிக்காய், உள்ளிட்ட பழ வகைகள் மற்றும் பச்சரிசி ஆகியவற்றை வைத்து காவிரிக்கு வழிபாடு நடத்தி வருகின்றனர்.
புதிதாக திருமணமான புதுமணத் தம்பதி தாலி பிரித்து கோர்க்கும் சடங்கும் நடைபெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக ஆடிப்பெருக்கு விழாவிற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாலும் காவிரி கரைபுரண்டு ஓடுவதாலும் ஏராளமான பக்தர்கள் காவிரியை வழிபட்டு புனித நீராடி வருகின்றனர். இதனையடுத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஆடிப்பெருக்கு மதப்பண்டிகையா? - மக்கள் பண்டிகையா?