மயிலாடுதுறை: தீப்பாய்தாள் அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவுடி அம்மாமணி என்கிற மணிகண்டன்(35). இவர் மீது கொலை, கொலைமுயற்சி ,கஞ்சாவிற்பனை, வழிபறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.
மயிலாடுதுறை காவல் நிலையக் குற்றவியல் பட்டியலில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், இன்று(டிச. 18) டிஎஸ்பி அலுவலக வளாகத்திற்கு வந்த ரவுடி அம்மாமணி, அங்கு உள்ளக் காவலர்களுக்கானத் தொலைதொடர்பு டவரில் (மிக அதிக அதிர்வெண் கோபுரம்) கையில் பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோலை எடுத்துக்கொண்டு ஏறித் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டல் விடுத்தார்.
பொய் வழக்கு போதுவதாகக் குற்றச்சாட்டு
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தன்னை நேற்று இரவு காவலர்கள் தேடி வந்ததாகவும் தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் காவலர்கள் பொய்வழக்கு போடுவதாகவும் கூறித் தற்கொலை மிரட்டல் விடுத்தார். உடனடியாக காவல் துறையினர் அம்மா மணியைக் கீழே இறங்க வலியுறுத்தினர்.
சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி வசந்தராஜ், அம்மாமணியிடம் கஞ்சா விற்பனையில் ஈடுபடாமல் திருந்தி வாழ்வதாகக் கூறினால் உன்மீது வழக்குப்பதிவு செய்யமாட்டேன் என்று ஒலிபெருக்கியில் கூறி கீழே இறங்க பேச்சுவார்த்தை நடத்தினார்.
மாவட்ட ஆட்சியர் வரவேண்டும் என்று கூறியதால் மயிலாடுதுறை வட்டாட்சியர் ராகவன் சம்பவ இடத்திற்கு வந்து ஒலிபெருக்கியில் அம்மாமணியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஒரு மணி நேரப் பேச்சு வார்த்தை
காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ய மாட்டார்கள் என்று உத்தரவாதம் அளித்தார். ரவுடி தற்கொலை மிரட்டல் சம்பவத்தால் காவல்நிலைய பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். தங்கள் செல்பொனில் படம் பிடித்தனர். தொடர்ந்து ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புதுறையினர் வரவழைக்கப்பட்டனர்.
1மணிநேர பேச்சுவார்த்தைக்குப்பின் அம்மாமணி கீழே இறங்கினார். தற்கொலை மிரட்டல் விடுத்த அம்மாமணியிடம் டிஎஸ்பி வசந்தராஜ் விசாரணை மேற்கொண்டு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.
அம்மாமணிமீது தற்கொலை மிரட்டல் விடுத்ததாக மயிலாடுதுறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க:வள்ளுவர் கோட்டத்தில் குடிசைகள் அகற்றம்;பதற்றம்