மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே நீடூர் கிராமத்தில் கடந்த பிப்.25 அன்று, ரயில்வே தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் வாயில் ரத்த காயத்துடன் நுரைதள்ளி இறந்த நிலையில் கிடந்த சடலம் மீட்கப்பட்டது.
இதனையடுத்து மயிலாடுதுறை காவல்துறையினர் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உடல்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவத்தை சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா உள்ளிட்ட 7பேர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அடையாளம் தெரியாத இளம்பெண் குறித்து அனைத்து காவல்நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று காவல்துறையினர் முதல் கட்ட விசாரணையைத் தொடங்கிய நிலையில், தனிப்படைக் காவல்துறையினர் சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை செய்ததில் நீடூர் பி.எம் நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான நாகராஜன் மகன் ஐயப்பன்(27) என்பவரைக் கைது செய்தனர்.
கொலை செய்யப்பட்டது 17 வயது சிறுமி
விசாரணையில் இறந்த இளம்பெண் 17 வயது சிறுமி என்பதும் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. மனைவி இறந்த நிலையில் குழந்தையுடன் வசிக்கும் ஐய்யப்பன் சிறுமியுடன் பழகி வந்துள்ளார். மகனை விடுதியில் சேர்த்து விட்டுத் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என ஐயப்பனை வற்புறுத்தி ரயில்வே தண்டவாளத்தில் படுத்து சிறுமி மிரட்டல் விடுத்ததால் கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து கொலை செய்த குற்றவாளியைக் கைது செய்தனர். 3 நாட்களில் சிறுமியைக் கொலை செய்த குற்றவாளியைப் பிடித்த தனிப்படைக் காவல்துறையினரை அலுவலகத்திற்கு வரவழைத்துப் பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் தனிப்படை காவல்துறையினருக்குப் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
இதையும் படிங்க:தினமும் ஓசியில் பிரியாணி கேட்பதாக திமுக நிர்வாகி மீது புகார்