கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக ஏற்கனவே திட்டமிட்டிருந்த திருமணங்கள் மட்டும் எளிமையாகவும், தகுந்த இடைவெளியை பின்பற்றியும் நடத்திக் கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் மேளதாளம், மணமக்கள் ஊர்வலம், உறவினர்களுக்கு விருந்து, திருமண மண்டபம் என அனைத்து செலவுகளையும் தவிர்த்து வீடு, கோயில்களில் எளிமையான முறையில் திருமணங்கள் நடைபெறுகின்றன.
இதனிடையே ஆடம்பர செலவுகளுக்கு பதிலாக ஊரடங்கில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஏழை மக்களுக்கு நிவாரணம் கொடுத்து திருமண விழாவை ஒரு திருமண தம்பதி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். நாகை மாவட்டம், தேவூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், கார்த்திகா தம்பதிக்கு தேவபுரீஸ்வரர் ஆலயத்தில் எளிமையான முறையில் இன்று திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் திருமண செலவிற்காக வைத்திருத்த பணத்தில் ஊரடங்கு உத்தரவினால் வாழ்வாதாரம் இழந்துள்ள 100 ஏழை குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான மளிகை பொருள்களை புதுமண தம்பதியினர் கொடுத்து மகிழ்ந்தனர். ஆடம்பர செலவுகள் பலவற்றை தவிர்த்து நிவாரண உதவிகள் செய்த புதுமண தம்பதியை அப்பகுதியைச் சேர்ந்த பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: மணமக்களுக்கு நாசிக் காவல்துறையின் சர்பிரைஸ் கிஃப்ட் "முபாரக் ஹோ தும்கோ"