அழிந்துவரும் அரியவகை வன உயிரினங்களில் ஒன்றான உடும்பு மருத்துவ குணம் கொண்டது என்றும் உடும்பை சாப்பிட்டால் உடலுக்கு வலு கூடும் என்றும் கூறப்படுகிறது. அதனால் கிராமங்களில் சிலர் சட்டத்திற்குப் புறம்பாக பிடித்து சமைத்து உண்கின்கின்றனர். உடும்பை பிடிக்க, வேட்டையாட அரசு தடை விதித்துள்ளது. மேலும் வன உயிரினச்சட்டப்படி கைது செய்து சிறையிலடைக்கக்கூடிய குற்றமாகும்.
தற்போது இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு அடைந்துவருவதால் உடும்பு, வெளிநாட்டுப்பறவைகளை வேட்டையாடுவது குறித்து கிராம மக்களே வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்து வருகின்றனர். அந்த தகவலின் பேரில் வனத்துறையினர் அவ்வப்போது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ள மல்லியம் கிராமத்தில் கூண்டுவைத்து உடும்பு பிடிக்கப்படுகிறது என வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், சீர்காழி வனச்சரகர் உத்தரவின்பேரில் 10-க்கும்மேற்பட்ட வனத்துறையினர் மல்லியம் கிராமத்தில் சோதனை செய்தனர்.
அப்போது, அருண் (28) என்பவர் வீட்டில் சோதனை செய்ததில் கூண்டில் உடும்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வனவர்கள் உடும்பை கைப்பற்றி அருணைக் கைதுசெய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகை கிளைச்சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:அரசு பள்ளி அருகே புகுந்த 4 அடி நீளமுள்ள உடும்பு