மயிலாடுதுறை: குத்தாலம் கீழமாந்தை மாதாக்கோயில் தெருவைச் சேர்ந்த தெய்வசகாயம் என்பவரது மகன் ஆல்பர்ட் (35). இவர் ஸ்ரீகண்டபுரம் அரசினர் மேல்நிலைபள்ளி அருகில் ஸ்டார் என்ற இணைய சேவை மையம் மற்றும் ஸ்டேசனரி கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவருக்கும் தஞ்சாவூர் மாவட்டம் அம்மன் குடியைச் சேர்ந்த ஜோசப்ராஜ் என்பவர் மகள் ஆரோக்கிய ஸ்ரீதேவி (27) என்பவருக்கும் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. பின்னர், கணவன் மனைவி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி இருந்தனர்.
இந்நிலையில் ஆல்பர்ட், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் அலைக்கழித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே ஆரோக்கிய ஸ்ரீதேவிக்கு அவரது குடும்பத்தினர் வேறு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தாலும் அதையும் ஆல்பர்ட் தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஆரோக்கிய ஸ்ரீதேவியின் அண்ணன் ஆரோக்கிய ஸ்ரீதர் நேற்று (ஜூலை 8) இரவு முகத்தில் கருப்பு துணி கட்டியபடி ஆல்பர்டின் கடைக்குச் சென்று, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆல்பர்ட்டை தலை, கழுத்து, கை, கால் ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டினார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பாலையூர் காவல் துறையினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆல்பர்டை மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இதனைத் தொடர்ந்து, அறிவாளால் வெட்டிய ஆரோக்கிய ஸ்ரீதரை, பாலையூர் காவல் துறையினர் கைது செய்து கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கொள்ளையடிக்க சென்ற வீட்டில் போதையில் அசந்து தூங்கிய திருடன்: இது மதுரை சம்பவம்!