மயிலாடுதுறை: ஒருங்கிணைந்த நாகை மாவட்ட அளவிலான யோகாசன போட்டி இன்று (ஜூலை 30) நடைபெற்றது. மாவட்ட யோகாசன சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இந்த யோகாசன சங்க தலைவர் ஜெகவீரபாண்டியன் தலைமை தாங்கினார். மொத்தம் ஆறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
பத்மாசனம், யோகமுத்ரா, சானுசீரானம், சலபாசனம், வக்ராசனம், உட்கட்டாசனம், அர்த தனுராசனம், பீடாசனம் சூர்யநமஸ்காரம், தடாசனம், ஜனுசிராசனம், கோமுகாசனம், குக்குட்டாசனம், உஷ்ட்ராசனம், சித்தாசனம், பர்வதாசனம், மண்டூகாசனம், தண்டாசனம், வீராசனம், பாதபத்மாசனம் உள்ளிட்ட பல்வேறு விதமான யோகாசனங்களை மாணவ மாணவிகள் செய்து காண்பித்து பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தினர்.
இதில் ஒரு சிறுமி இரண்டு சதுர அடி அளவுள்ள அட்டைப்பெட்டிக்குள் யோகாசனத்தை செய்து காண்பித்தது அனைவரையும் கவர்ந்தது. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் சுழற் கேடயங்களும் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: காமன்வெல்த் 2022: இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்றுதந்த சங்கேத் சர்கர்