மயிலாடுதுறை: தரங்கம்பாடி வட்டம், பொறையாரைச் சேந்த சிறுவன் ஸ்டீபன் பாபு (14). ஸ்டீபன் பொறையாறில் உள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.இவருக்கு காட்போர்டைக் கொண்டு கைவினைப் பொருட்கள் தயாரிப்பதில் சிறு வயது முதலே ஆர்வம் இருந்துள்ளது. கரோனா ஊரடங்கு காலத்தில் தனக்கு இருந்த ஆர்வம் காரணமாக, தனது திறனை மேம்படுத்திக் கொண்டார்.
இது தவிர, பெயின்டிங், மெழுகு மற்றும் களிமண்ணால் ஆன கைவினைப் பொருட்கள் தயாரிப்பது, எலெக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பு, காகிதம் மற்றும் சாக்பீஸ் கொண்டு பொருட்கள் தயாரிப்பது என்று பலவற்றையும் கற்றுக் கொண்டார். இவரது ஆர்வத்தைக் கண்ட அவரது தந்தை பாபுகுமார் காட்போர்டைக் கொண்டு கைவினைப் பொருட்கள் செய்வதற்கான மூலப் பொருட்களை வாங்கித் கொடுத்துள்ளார்.
பஸ், கார், டிராக்டர், டெலிபோன், லாக்கர் ஆகியவற்றின் மாதிரி வடிவங்களை முழுக்க, முழுக்க அச்சு அசலாக பல்வேறு அளவுகளில் உருவாக்கி, தகுந்த பெயின்டிங் செய்து அசத்தியுள்ளார். தமிழ்நாடு அரசின் விரைவு பஸ்கள் (SETC), மகேந்திரா வேன் போன்றவற்றையும் அழகாக உருவாக்கியுள்ளார். இவரது திறமையைக் கண்ட பள்ளி ஆசிரியர்கள் இவர் உருவாக்கிய பொருட்களை கண்காட்சியாகவும் வைக்க வாய்ப்பளித்தனர்.
படிப்பிலும் கெட்டிக்காரர்
மேலும், கைவினைப் பொருட்கள் தயாரிப்பதைத் தவிர, டைலரிங், சைக்கிள் ரிப்பேர், சமையல் கலை உள்ளிட்டவற்றையும் கரோனா ஊரடங்கு காலத்தில் யூடியூபை பார்த்து கற்றுத் தேர்ந்துள்ளார். படிப்பு, விளையாட்டு என்று சிறந்த மாணவனாக விளங்கும் இவர், தனது திறமையை பயன்படுத்தி பள்ளியில் இருந்து சான்றிதழ் மற்றும் கேடயம் பலவற்றை பரிசாக பெற்றுள்ளார்.
அப்துல்கலாம் போல வர ஆசை
கரோனா ஊரடங்கு காலத்தை மிகவும் பயனுள்ள முறையில் செலவிட்டு, இன்டர்நெட்டை, தனது திறன் மேம்பாட்டுக்காக பயன்படுத்திக் கொண்ட ஸ்டீபன் பாபுவின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இவர் மற்ற சிறுவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார். முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் போல் விஞ்ஞானியாக வரவேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக பலவித அறிவியல் பூர்வமாக பொருள்களை வடிவமைத்து சிறுவன் அசத்தி வருகிறார்.
இதையும் படிங்க: தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்புடன் கொண்டாடுவது எப்படி? - விளக்குகிறார் டாக்டர் செல்வவிநாயகம்