நாகப்பட்டினம்: மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் கிராமத்தில் தனியார் கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் 1970 - 1973ஆம் ஆண்டுகளில் வேதியியல் பிரிவில் 35 மாணவர்கள் பயின்றுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானோர் அரசு மற்றும் தனியார் பணிகளில் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளனர். பலர் விவசாயிகளாகவும், தொழிலதிபர்களாகவும் உள்ளனர்.
50 ஆண்டுகள் உருண்டோடிய நிலையில் அப்போது வேதியியல் பிரிவில் பயின்ற மாணவர்களில் ஒருவரும், அஞ்சல் துறை அதிகாரியுமான சாமிகணேசன் என்பவர் தீவிரமாக முயன்று தன்னுடன் பயின்ற மாணவர்களின் முகவரியை கண்டுபிடித்துள்ளார்.
இதில், 5 மாணவர்கள் இறந்தது தெரிய வந்ததுடன், மேலும் 5 பேரின் முகவரியை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், 50 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் 20 பேர் அதே கல்லூரியில் ஒன்று கூடி தங்கள் கல்வி பயின்று முடித்து 50 ஆண்டுகள் நிறைவடைந்த பொன்விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
தொடர்ந்து, அவர்கள் தனியார் கல்லூரியின் வேதியியல் துறையில் பயிலும் இந்நாள் மாணவர்களுக்கு கணினி உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினர்.
இதையும் படிங்க: மனைவிக்கு நகைகள் போட்டு அழகு பார்க்க ஆசை.. பிலிப்ஸ் நிறுவனத்தில் 5 கோடி மோசடி.. பலே இளைஞர்கள் சிக்கியது எப்படி?
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் தங்களது பசுமை மாறாத நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத மாணவர்கள் வீடியோ காலிங் மூலம் தங்களது கல்லூரி தோழர்களை கண்டு மகிழ்ச்சியை தெரிவித்ததுடன், அடுத்த சந்திப்பில் அனைவரும் கலந்து கொள்வதாக உறுதி அளித்தனர்.
மேலும், கல்லூரி பயின்ற கடைசி நாளில் தாங்கள் எடுத்துக் கொண்ட குழுப்புகைப்படத்தினை பார்த்த அனைவரும் அரை நூற்றாண்டுக்குப் பிறகு ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் நாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான உலக புகழ் பெற்ற ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. தேவார பாடல் பெற்ற இக்கோயில் சுவாமி கால சம்ஹாரமூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை சம்ஹாரம் செய்ததால் அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.
கோயிலில் சிறப்பு ஹோமம் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி ஏற்படும் என்பது ஐதீகம். இதனால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் 60, 70, 80, 90, 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இக்கோயிலுக்கு வந்து சிறப்பு ஹோமம் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டு திருமணங்கள் செய்து கொள்வதால், இக்கோயிலில் வருடத்தின் அனைத்து நாட்களும் சிறப்பு ஹோமங்களும், திருமணங்களும் தினந்தோறும் நடைபெற்று வருகிறது.
பல்வேறு சிறப்புகளையுடைய இக்கோயிலுக்கு தனியார் கல்லூரியில் 1970 - 1973ஆம் ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 20 பேர் தங்கள் குடும்பத்தினருடன் வந்து தங்கள் கல்வி பயின்று முடித்து 50 ஆண்டுகள் நிறைவடைந்த பொன்விழாவையொட்டி ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு பூஜைகள் செய்து கள்ளவர்ண விநாயகர், ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர், காலசம்காரமூர்த்தி, ஸ்ரீ அபிராமி அம்மன் சன்னதிகளுக்கு சென்று வழிபட்டனர்.
இதையும் படிங்க: "ரோட்டை சுத்தம் செய்யும் எங்களுக்கு அதில் அமர உரிமை இல்லையா?" - நெல்லையில் தூய்மை பணியாளர்கள் ஆதங்கம்!