மயிலாடுதுறை: தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மேலும் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச்செல்லக்கூடாது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதனைத்தொடர்ந்து தரங்கம்பாடி மற்றும் சீர்காழி தாலுகா பகுதியில் உள்ள 26 மீனவ கிராம மீனவர்கள் கடலுக்குப் மீன் பிடிக்கச் செல்லாமல் உள்ளனர். தரங்கம்பாடி, சந்திரபாடி, திருமுல்லைவாசல், பூம்புகார் பகுதிகளுக்குச் சென்ற மீன்வளத்துறை அதிகாரிகள் கடலோரப் பாதுகாப்பு, மற்றும் காவல் நிலைய போலீசார் 26 மீனவ கிராமங்களைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குச்சென்று மீன்பிடிக்கவோ, கடலில் தங்கி மீன்பிடிக்கவோ வேண்டாம் எனவும், மேலும் தங்கள் படகுகளையும், உடைமைகளையும் பத்திரமாக வைத்துக்கொள்ளுமாறு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் தரங்கம்பாடி, சந்திரபாடி, குட்டியாண்டியூர், உள்ளிட்ட 26 மீனவ கிராமங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் தங்களுக்குச் சொந்தமான 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 5000க்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகளையும் கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: மயிலாடுதுறையில் பதுக்கி வைத்திருந்த 310 ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்