நாகப்பட்டினம்: 2004 ஆம் ஆண்டு இதே நாள் (டிசம்பர் 26) அன்று இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவு கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், சுனாமி என்னும் ஆழிப்பேரலை உருவாகி பல நாடுகளின் கடலோரப் பகுதிகளை அழித்துச் சென்றது.
இந்த ஆழிப்பேரலையில் சிக்கி தமிழ்நாட்டில் ஏராளமான உயிர்சேதமும், பொருள்சேதமும் ஏற்பட்டது. குறிப்பாக நாகப்பட்டினத்தில் பெரும் உயிர்சேதம் ஏற்பட்டது. இந்த கோர சம்பவத்தின் தீரா வடுக்களை நினைவு கூறும் 17ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
நாகப்பட்டினம் பழைய பேருந்து நிலையம் மறைமலை அடிகளார் சிலையில் இருந்து தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவரும், நாகை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான கௌதமன் தலைமையில் மீனவர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு கடலில் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
நகரின் முக்கிய வீதிகள் வழியாக மவுன ஊர்வலமாக சென்று கடற்கரையில் அமைந்துள்ள கலங்கரை விளக்கத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக நாகப்பட்டினம் அக்கரைபேட்டை மீன்பிடி துறைமுகம் பகுதியில் சுனாமியால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் கௌதமன் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இல.மேகநாதன், கோவிந்தராஜன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: இலங்கை மீதான மெத்தனப் போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் - நவாஸ் கனி