மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு லட்சுமி நகரில் வசித்து வருபவர் ஓய்வுபெற்ற ரயில் ஓட்டுநர் சுவாமிநாதன் (79). இவரது மனைவி ருக்மணி இறந்துவிட்ட நிலையில் இவரது இரண்டு மகன்களும் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர்.
கடந்த 9ஆம் தேதி கோயம்புத்தூரிலுள்ள இளைய மகன் செந்தில்குமார் வீட்டிற்குச் சென்ற சுவாமிநாதன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அங்கேயே தங்கியுள்ளார். இந்நிலையில் இன்று (ஜூன் 04) காலை சுவாமிநாதன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து இன்று மாலை அவர் ஊர் திரும்பியுள்ளார்.
வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவிலிருந்த அவரது மனைவியின் 17 சவரன் நகை, 4 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை குற்றவியல் காவல் துறையினர், சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், திருட்டு கும்பலை தேடி வருகின்றனர்.