மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ரயில்வே ரோட்டில் வசித்து வருபவர் தன்ராஜ்(50). இவர், சீர்காழி அருகே தருணம் தர்மபுரம் பகுதியில் அடகு, நகைக்கடை நடத்திவருகிறார். இந்தநிலையில், இன்று(ஜன.27) காலை 6 மணியளவில் நான்கு பேர் தன்ராஜ் வீட்டின் கதவை தட்டி ஹிந்தியில் பேசியுள்ளனர்.
உதவிக்கு அழைக்கிறார்களா என நினைத்து, தன்ராஜ் மனைவி ஆஷா(45) கதவைத் திறந்துள்ளார். உடனடியாக, அவரை வீட்டிற்குள் தள்ளிய வட மாநில கும்பல், ஆஷா மற்றும் அவரது மகன் அகில் (24) ஆகிய இருவரையும், மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்தனர். தொடர்ந்து, தன்ராஜ், அவரது மருமகள் நெக்கல் ஆகியோரையும் கத்தியால் குத்தினர்.
இதைத்தொடர்ந்து, வீட்டின் படுக்கை அறைக்குள் நுழைந்த நபர்கள் கட்டிலுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். மேலும் வீட்டில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவின் ஹார்டுடிஸ்க்கையும் கொள்ளையர்கள் எடுத்துக்கொண்டு, நகை வியாபாரி தன்ராஜ் காரிலே தப்பியோடினர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சீர்காழி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், விற்பனைக்காக தன்ராஜ் வைத்திருந்த 15 கிலோ நகைகளை கொள்ளையர்கள் எடுத்து சென்றது தெரியவந்தது.
இரண்டு பேரை கொலை செய்து நகைகளுடன் தப்பியோடிய வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களை காவல்துறையினர் தேடிவந்தனர். இந்த நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய வட மாநில கொள்ளையர்கள் மூவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த நிலையில், கொள்ளையர்களில் ஒருவரை காவல்துறையினர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.