மயிலாடுதுறை மாவட்டம், அரையபுரம் சாலையில் குத்தாலம் முதல்நிலை காவலர் பாபு, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் நாகராஜன், மத்திய புலனாய்வு காவலர் சார்லஸ் ஆகியோர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, மினிலாரி ஒன்று தேநீர்க்கடை அருகே நின்றுகொண்டிருந்தது. லாரி அருகே தேநீர் அருந்திக்கொண்டிருந்த ஓட்டுநர் காவலர்களைக் கண்டதும் மறைந்து நின்றுகொண்டு எட்டிப்பார்த்துள்ளார். ஓட்டுநரின் செயல் சந்தேகத்திற்கிடமாக இருந்ததால் காவலர்கள் மினி லாரியை சோதனையிட்டனர்.
லாரியின் உள்பக்க நீள அளவு வெளிப்பக்க அளவைவிட குறைவாக இருந்தது. லாரியின் மேலே ஏறிபார்த்தபோது ஒன்றரை அடி அளவில் ரகசிய அறை அமைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதில், 30 கேன்களில் ஆயிரத்து 50 லிட்டர் எரிசாராயம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, காவல் துறையினர் மினி லாரியையும் சாராயத்தையும் பறிமுதல்செய்தனர்.
தொடர்ந்து, காவல் துறையினர் ஓட்டுநரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டதில், சோழிங்கநல்லூர் வடக்குப்பட்டு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (36) என்பதும் சிதம்பரத்திலிருந்து கும்பகோணத்திற்குச் சாராயத்தைக் கடத்திச் செல்வதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: கல்வராயன் மலையில் 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு!