மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே கடந்த 2010ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, தமிழிசை மூவர் மணிமண்டபம் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது.
சீர்காழியில் பிறந்து வாழ்ந்து, தமிழை தங்கள் இசையால் உலகெங்கும் கொண்டு சென்ற முத்துத்தாண்டவர், அருணாச்சல கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை ஆகிய மூவரையும் போற்றும்விதமாக பிரமாண்ட வெண்கலச் சிலைகளும் அமைக்கப்பட்டு, அவர்களுடைய வரலாறு மற்றும் தமிழ் மொழிக்கு அவர்கள் ஆற்றிய சேவையை கூறுவதற்காக ஓர் அலுவலரும் நியமிக்கப்பட்டனர்.
ஜெயலலிதா திறந்து வைத்த மணிமண்டபம்
ஆனால், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராத நிலையில் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப்பின் கடந்த 2013ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் இந்த மண்டபம் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. அன்று முதல் தமிழிசை மூவர் விழா மட்டுமே நடைபெற்று வந்தது.
கரோனா கட்டுப்பாடுகளால் கடந்த இரண்டு ஆண்டுகளாக, அவ்விழாவும் நடைபெறவில்லை. இந்நிலையில் மணிமண்டபம் பராமரிப்பின்றி தரைதளப் பகுதிகள் உள்வாங்கியும், பளிங்கு கற்கள் உடைந்து மேடு பள்ளமாகவும் சிதிலமடைந்து காணப்படுகின்றன.
![தமிழிசை மூவர் மணிமண்டபம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-ngp-04-tamizhisai-muvear-mandram-public-request-visual-tn10023mp4_08102021161203_0810f_1633689723_762.jpg)
மின் இணைப்புகள் மற்றும் மின் விளக்குகளும் பழுதடைந்து, அடிப்படை வசதிகள் இன்றி புதர்மண்டிக் கிடக்கிறது. உலகெங்கும் தமிழ் மொழியை இசையால் பரப்பிய தமிழிசை மூவரின் வெண்கலச்சிலைகளும்; பொலிவிழந்து மணிமண்டபமும் பழுதடைந்து கிடப்பது, அப்பகுதி தமிழ் ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
![பராமரிப்பின்றி பழுதடைந்த கிடக்கும் தமிழிசை மூவர் மணிமண்டபம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-ngp-04-tamizhisai-muvear-mandram-public-request-visual-tn10023mp4_08102021161203_0810f_1633689723_448.jpg)
வரலாற்றுச்சிறப்பு மிக்க தமிழிசை மூவர் மணிமண்டபத்தைச் சீரமைத்து, அவர்களின் வரலாறு குறித்த அருங்காட்சியமாக அமைக்கவும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் தமிழ் ஆர்வலர்களும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.