மதுரை மாவட்டம், அவனியாபுரம் அருகே உள்ள வைக்கம் பெரியார் நகரில் கடந்த சனிக்கிழமை காலை 8 மணி அளவில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞரின் உடல் தலையில்லாமல் கிடைக்கப்பெற்றது. இதனைத் தொடர்ந்து அவனியாபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.
மதுரை மாநகர் துணை காவல் ஆணையர் கார்த்திக் உத்தரவின்பேரில், அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பெத்துராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு 30க்கும் மேற்பட்ட காவல் துறையினர் கொலை செய்யப்பட்ட இளைஞரின் தலையைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இளைஞர் தலை கொலை செய்யப்பட்ட பகுதியின் அருகே 500 மீட்டர் தொலைவில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
கொலை செய்யப்பட்ட நபர் தஞ்சாவூரைச் சேர்ந்த இளைஞர் திருநாவுக்கரசர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் நாடோடியாகத் திரிபவர் என்றும் கூறப்படுகிறது.
தொடர்ந்து முதற்கட்ட தகவலின் படி, தஞ்சாவூரைச் சேர்ந்த திருநாவுக்கரசர் என்ற இளைஞர் நாடோடியாக மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் உள்ள வைக்கம் பெரியார் நகர் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பிரபல பைப் குமார் என்பவர், திருநாவுக்கரசருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, வெள்ளிக்கிழமை இரவில் அவருடன் இங்கேயே இருக்கும்படி கூறியுள்ளார்.
இரவு நேரத்தில் மது அருந்துவதற்காக வைக்கம் பெரியார் நகரைச் சேர்ந்த சிவக்குமார், முத்துப்பாண்டி ஆகியோர் சம்பவம் நடந்த பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது தஞ்சாவூர் இளைஞரை விசாரிக்கும்போது, பைப் குமார் இங்கு இருக்கும் படி கூறியதாகவும் கூறியுள்ளார்.
ஏற்கெனவே, பைப் குமாருக்கும், சிவக்குமாருக்கும் முன் விரோதம் இருந்து வந்த நிலையில், சிவக்குமார் மேலும் மூவரை கூட்டி வந்து பைப் குமாரையும், திருநாவுக்கரசரையும் கொலை செய்ய முயன்றுள்ளார்.
இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ரவுடி பைப் குமார் தப்பியோடினார். பரிதாபமாக மாட்டிக்கொண்ட திருநாவுக்கரசரை சிவக்குமாரின் கும்பல், வெட்டி 500 மீட்டர் தொலைவில் புதைத்துச் சென்று விட்டனர்.
மேலும், அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பெத்துராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் சிவக்குமார் மற்றும் முத்துபாண்டியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் வார விழா விழிப்புணர்வு பேரணி!