தகவல் தொழில்நுட்பத் துறை மூலம் கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டம் குறித்து காணொலி கலந்தாய்வு இன்று (செப்.1) மதுரையில் நடைபெற்றது.
இதில், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் உதயகுமார், தகவல் தொழில்நுட்பத் துறையின் முதன்மைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா உள்ளிட்டோர் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர்.
இந்நிகழ்வுக்கு பின்னர் அமைச்சர் உதயகுமார் கூறுகையில், “கிராமப்புற இளைஞர்களுக்கு அந்தந்த மாவட்டத்திலேயே ஐடி துறையில் பணி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த மார்ச் மாதத்தில் கணக்கெடுப்பு நடத்தியதில் இளைஞர்கள் கிராமப்புறங்களில் உள்ள தங்கள் சொந்த ஊரிலிருந்து பணிபுரிய விரும்புவது தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே இருக்கும் கட்டடங்களை வாடகைக்கு எடுத்து அதனை ஐடி நிறுவனங்களாக இயக்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
கரோனா பரவாமல் தடுக்கும் வண்ணம் குளிர்சாதன வசதியின்றி தகுந்த இடைவெளியுடன் பணியாற்ற உறுதியளித்துள்ளனர். மென்பொருள் உருவாக்குவதற்கு பெரும்பாலான கணினி பொறியாளர்கள் கிராமத்திலிருந்து நகரத்தை நாடுகின்றனர்.
இதனால்தான் தற்போது கிராமப்புறங்களில் தேடி தகவல் தொழில்நுட்பங்கள் அமைக்க முடிவு செய்துள்ளோம். புதிய முயற்சியாக கிராமங்களிலிருந்து ஊழியர்கள் பணிபுரிய 12 ஆயிரத்து 524 கிராமங்களில் இன்டர்நெட் சேவையை வழங்கியுள்ளோம்.
அதன் மூலம் கேபிள் டிவி, சாட்டிலைட் போன் அனைத்து வசதிகளையும் கொண்டுவரும் பணிகள் தொடங்கிவிட்டன.
இந்தியாவிலேயே முதல் மாநிலமாக இதனை செயல்படுத்த தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை முயற்சி எடுத்து வருகிறது.
முன்மாதிரியாக சோதனை ஓட்டம் தற்போது அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதிக சம்பளத்துடன் பணிபுரிய கிராமப்புற இளைஞர்கள் வாய்ப்புகள் முழுமையாக பயன்படுத்த வேண்டும். உலகளாவிய போட்டியை சந்திக்க நாம் தகவல் தொழில்நுட்பத்தில் கிராமப்புறங்களிலிருந்து சந்திக்க தயாராக இருக்கிறோம்.
இது போன்ற முயற்சிகளுக்கு தமிழ்நாடு அரசு எப்போதும் வரவேற்க காத்திருக்கிறது. தமிழ்நாட்டிலேயே ஐடி துறையில் தென்தமிழ்நாட்டில் பிறந்தவர்கள்தான் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்கள்”என்றார்.
இதையும் படிங்க:மதுரையில் கரோனா நோயாளிகளுக்கு சுகாதாரமான உணவு வழங்கப்படுகிறதா?